Wednesday, October 24, 2007

வரைமுறைகளும்
வரையரைகளும்
வரவேண்டாம்
நமக்குள்ளும்
நமது நட்புக்குள்ளும்...

இதுவென்றும்
அதுவென்றும்
பெயர் சூட்டவேண்டாம்
இன்னதென்றறியா
நமது பந்தத்திற்கு...

நாய் தூற்றும்
நரி தூற்றும்
என்று புதைக்க நினைத்தாலும்
முல்லையாய் சிரித்து
முழுவதுமாய் ஆக்ரமிக்கும்
நமது நட்பை
எங்கிட்டு அடைப்பது
என் மனம் மறக்கும் வண்ணம்?
உணர்வுகளால்
உருவான என்
உலகத்தில்
உயர உயர பறந்திட
வீழும் நொடியொன்றில்
விசுக்கென பற்றி
மேலிழுத்து சென்றாய்
வானம் தாண்டிய வெளியில்
பிரஞ்ஞைகள் அற்று சுற்றி திரிந்திட
கணப்பொழுதில்
கண்கள் தாண்டிப் போகிறாய்
கண்முன்னே நீ
காணாமல் போவதை
கண்ணுற்றவாறே
சிறகு குவிக்கிறேன்...
நாளாக நாளாக‌
கரையான் அரித்த
உத்தரத்தினின்றும்
உதிரும் துகளாய்
உதிர துவங்குகின்றன
உன் நினைவுகள்
என்னில் இருந்து...

Wednesday, October 3, 2007

முற்றுப்புள்ளி வைக்கவே
முயல்கிறோம்
ஒவ்வொரு முறையும்
மறுகும் மனம்
ஜெயித்து
முடிவுகள் தோற்க‌
வாழ்கிறது நம் பந்தம்..
நீயும் முயன்றிருப்பாய்
என்னில் விழும்
உன் மனதை தடுக்க
எந்த கணத்தில்
என் ஆழ்மனம்
அதிகப்பிரசங்கியானது என்று
ஆலோசித்து தோற்கிறேன்
அடிக்கடி ஆக்ரமிக்கும்
உன் நினைவுகளால்...
அன்றும் இதைப்போலவே
அமர்ந்து மழை இரசித்தேன்
அன்று உன்னோடும்
இன்று உன் நினைவுகளோடும்
இனிமையாகவே இருக்கிறது
எனது மழைக்காலங்கள்!