Friday, August 29, 2008

தளிர்கள் விளையாட்டுக்கள்

விளையாட்டு- 16
கள்ளன் போலீஸ்
கள்ளன் போலீஸ் என்பது வீட்டிற்குள் அமர்ந்து விளையாடும் விளையாட்டு தான். இதே போன்று வீட்டிற்கு வெளியில் விளையாடும் விளையாட்டும் இதே பெயரில் உண்டு.
இந்த விளையாட்டு வீட்டிற்குள் ஆடுவதைக் குறித்தது. பொதுவாக நான்கு பேர் பங்கு கொள்வார்கள். நான்கு சீட்டு எழுதி வைத்திருப்போம். ஒவ்வொரு சீட்டிற்கும் ஒரு மதிப்பெண் உண்டு.

1.ராஜா - 1000
2.ராணி - 500
3.போலீஸ் - 100
4.திருடன் - 0

இப்படியாக நான்கு சீட்டும் எழுதி ஒன்றுபோல மடித்து, யாராவது குலுக்கி போட அவசர அவசரமாக ஆளுக்கொரு சீட்டு எடுத்து கொள்வோம். யாருக்கு என்ன சீட்டு என்று யாருக்கும் தெரியாது. போலீஸ் சீட்டு யாரிடம் உள்ளதோ அவர் திருடன் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். சரியாக கண்டுபிடித்தால் போலீஸ் சீட்டு எடுத்தவருக்கு 100 மதிப்பெண் திருடனுக்கு 0, தவறாக கூறினால் திருடனுக்கு 100, தவறாக கூறியவர்க்கு 0. விளையாடும் நான்கு நபர்கள் பெயரும் ஒரு காகிதத்தில் எழுதி மதிப்பெண் குறிக்கப்படும். ஆட்டம் முடியும் நேரத்தில் யாருடைய மதிப்பெண் அதிகமாக இருக்கிறதோ அவர் வெற்றி பெற்றவராவர்.

இதில் ஒவ்வொருமுறை ஆடும் போதும் காகித சீட்டை கொஞ்சம் தினுசாக மடிப்பார்கள்,அடுத்த ஆட்டத்தில் அடையாளம் காண, ஆகையால் அனைவரும் பரிசோதித்து பார்த்துக் கொள்வார்கள் ஒரே மாதிரி இருக்கிறதா என்று. சில சமயம் போட்டி போட்டு எடுக்கையில் காகிதம் கிழிந்தும் விடும். சமயங்களில் விளையாடும் நபரின் எண்ணிக்கை அதிகமானால், மந்திரி, சிப்பாய் என சில சீட்டுக்களும் எழுதி சேர்த்துக்கொண்டு அதற்குத் தகுந்தாற்போல மதிப்பெண்ணும் இடுவதுண்டு.

முழுஆண்டு விடுமுறையில் மதியம் வெளியே விளையாட போகவிடமாட்டார்கள் வெயிலை காரணம் காட்டி. அப்பொழுதெல்லாம் இப்படி வீட்டிற்குள் இருந்து காகிதம் கிழித்து கள்ளன் போலீஸ் விளையாடுவோம்.

Monday, August 18, 2008

உன்னிடம் சொல்லிவிடவென்று
உருவாக்கி வைத்த வார்த்தையொன்று
சொல்லப்படாமலேயே காத்திருக்கிறது
உனை கடக்கையில்,
வழக்கமான புன்னகையில்,
மணிக்கணக்கான உரையாடலில்,
ஒரு பொழுதினில்
என் கண்களோ, செய்கைகளோ
ஏதோ ஒன்று உணர்த்தியிருக்கக்கூடும்
நான் சொல்லிவிட துடிக்கும் வார்த்தைதனை
பாசாங்கில் பவனி வரும்
உன்னிடம் கூட எனக்கான வார்த்தை
தவமிருக்ககூடும்..

தளிர்கள் விளையாட்டுக்கள்

விளையாட்டு - 15
பெயர் நிரப்பல்

நாம் பள்ளியில் படிக்கும் காலத்தில் கோடிட்ட இடத்தை நிரப்புக என்று தேர்வில் எழுதியிருப்போம். அதன் வழித்தோன்றல் தான் இந்த விளையாட்டு என்று நினைக்கிறேன். ஒரு நபரின் பெயரோ, ஊரின் பெயரோ, மலர்களின் பெயரோ இல்லையேல் இருக்கவே இருக்கு சினிமா படங்களின் பெயர் இப்படி ஏதாவது ஒரு பெயரை தொடங்கி தொடராமல் தொங்கவிட வேண்டும்... விடுபட்ட கோடுகளை எழுத்துக்கள் மூலம் நிரப்பி அது என்ன என்பதை கண்டுபிடிக்கும் ஆட்டம் தான் பெயர் நிரப்பல். பெரும்பாலும் நாங்கள் விளையாட உபயோகிப்பது சினிமா படங்களின் பெயர்களை தான்.

உ.தா: வ_ _ _ _ நி_ _ _ _ _ பு (கமலஹாசன், ஸ்ரீதேவி)

இப்படி 5 அல்லது 10 படங்களின் பெயரை ஒரு தாளில் எழுதி, கண்டுபிடிக்க குறிப்பாக நடித்தவரின் பெயரை குறிப்பிட்டு கொடுப்போம். இதற்காக பழைய படங்களின் பெயரை எல்லாம் மனதில் பதிய வைப்பது உண்டு. சில படங்கள் கண்டுபிடிக்க எளிதாக தோன்றினால் நடிகர் பெயரைக் குறிப்பிடாமல் போடலாம். அப்படி மற்றவர் நிரப்பியபின் அதை பரிசீலனை செய்து மதிப்பெண்கள் போட்டுக் கொள்வோம். வழக்கம் போல அதிக மதிப்பெண் எடுத்தவர் வெற்றியாளர். இதில் படம் பெயர் தெரியாமல் போனால் என்னமோ ஒன்றை போட்டு நிரப்பி இப்படி ஒரு படம் வந்தது என்று வாதிடுவது உண்டு. மூளையை கசக்கிக் கொள்ள வைக்கும் ஒரு சிறு விளையாட்டு தான் இந்த பெயர் நிரப்பல். தமிழ் எழுத்து பிழை இல்லாமல் கற்க ஒரு வழி இது என்று கொள்ளலாம். ஒற்று எங்கு வரும் வராது என்று ஆராய்வதால் இப்படி சொல்கிறேன்.

Friday, August 15, 2008

தளிர்கள் விளையாட்டுக்கள்

விளையாட்டு - 14
சோடா மூடி
இது சோடா மூடி கொண்டு விளையாடப்படும் உள்விளையாட்டு. இப்பொழுதுதான் பெப்ஸி,கோக் எல்லாம், அப்போ ஆ ஊ ன்னா சோடா தான், அதுவும் கறுப்பு கலர் சோடா ரொம்பவே பிரபலம். கடைகளுக்கு பக்கத்தில் எல்லாம் எக்கச்சக்கமாய் கிடக்கும் சோடா மூடி அதை சேகரித்து வைப்போம் இப்படி விளையாட. சோடா மூடியை தட்டையாக அடிச்து அதன் நடுவே இரண்டு துளைபோட்டு ஒரு நூலை அந்த துளைகளின் வழியே நுழைத்து இரு நுனிகளையும் முடிச்சிட்டு நூலை இருகைகளின் இரண்டு இரண்டு விரல்களில் சிக்கவைத்து, பின் நூலை மூடியில் இருந்து சம தொலைவில் உள்ளபடி வைத்து ரயில் ஓட்டுவதுபோல் கைகளை இயக்கி மூடியை சுழற்றி நூலுக்கு முறுக்கு ஏற்றி பின் கைகளை அகற்றியும் அணுக்கியும் அந்த மூடியை சுத்த வைப்போம். முறை ரொம்பவும் குழப்புவதாக இருந்தால் ஆனந்தம் படத்தில் வரும் பல்லாங்குழி பாட்டில் சிநேகா இதை விளையாடுவார். பார்த்திருந்தீர்கள் என்றால் சட்டென்று புரியும். :)

இப்படி ஒரு மிட்டாயும் உண்டு, சோடா மூடிக்கு பதிலாக வெள்ளை கலரில் வட்டமாய் மிட்டாய் நூலோடு இருக்கும். யாரும் சுவைத்திருக்கிறீர்களா தெரியவில்லை, நாங்கள் அதை வாங்கி விளையாடி விட்டு மறக்காமல் மிட்டாயை சாப்பிட்டு விடுவோம். இதிலும் யார் வேகமாக சுற்றுகிறார்கள், யாருடைய சிப்பி அதிக நேரம் சுழல்கிறது என்று பார்ப்போம்.

Sunday, August 10, 2008

தளிர்கள் விளையாட்டுக்கள்

விளையாட்டு - 13
எழுத்து கண்டுபிடித்தல்


எழுத்து கண்டுபிடித்தல் என்பது ஒரு சின்ன விளையாட்டு தான். முதுகில் ஒருவர் கையால் எழுதும் பெயரோ, ஊரோ அதை கண்டுபிடிக்க வேண்டும். ஒருமுக சிந்தனையை வளர்க்க உதவும் விளையாட்டு இது. கைகளின் அசைவை கூர்ந்து கவனித்தால் மட்டுமே சரியாக சொல்ல இயலும். முதல் இரு சொற்கள் மூலம் அனுமானம் செய்யும் வாய்ப்பு உள்ளதென்பதால் கண்டுபிடிக்க இயலா வண்ணம் புது புது வார்த்தைகளை தேடுவர் சிறார். விளையாட்டின் பொருட்டாவது புது சொற்கள் அறியும் வாய்ப்பு அமைகிறது. சில நேரம் அப்படி ஒரு வார்த்தை உள்ளதா என்ற ஆராய்ச்சி எல்லாம் நடக்கும். நிறைய தமிழ் சொற்கள் அறியவும், கவனிப்பு திறனை அதிகப் படுத்தவும் உதவும் விளையாட்டு இது. மேலும் கோடை நேரங்களில் வெளியே சென்று விளையாட இயலாத நிலையில் இப்படி வீட்டில் இருந்தவாறே பல விளையட்டுக்கள் கலவையாய் விளையாடும் போது நேரம்போக எளிதாக இருக்கும்.

தளிர்கள் விளையாட்டுக்கள்

விளையாட்டு - 13
எழுத்து கண்டுபிடித்தல்


எழுத்து கண்டுபிடித்தல் என்பது ஒரு சின்ன விளையாட்டு தான். முதுகில் ஒருவர் கையால் எழுதும் பெயரோ, ஊரோ அதை கண்டுபிடிக்க வேண்டும். ஒருமுக சிந்தனையை வளர்க்க உதவும் விளையாட்டு இது. கைகளின் அசைவை கூர்ந்து கவனித்தால் மட்டுமே சரியாக சொல்ல இயலும். முதல் இரு சொற்கள் மூலம் அனுமானம் செய்யும் வாய்ப்பு உள்ளதென்பதால் கண்டுபிடிக்க இயலா வண்ணம் புது புது வார்த்தைகளை தேடுவர் சிறார். விளையாட்டின் பொருட்டாவது புது சொற்கள் அறியும் வாய்ப்பு அமைகிறது. சில நேரம் அப்படி ஒரு வார்த்தை உள்ளதா என்ற ஆராய்ச்சி எல்லாம் நடக்கும். நிறைய தமிழ் சொற்கள் அறியவும், கவனிப்பு திறனை அதிகப் படுத்தவும் உதவும் விளையாட்டு இது. மேலும் கோடை நேரங்களில் வெளியே சென்று விளையாட இயலாத நிலையில் இப்படி வீட்டில் இருந்தவாறே பல விளையட்டுக்கள் கலவையாய் விளையாடும் போது நேரம்போக எளிதாக இருக்கும்.

Saturday, August 9, 2008

தளிர்கள் விளையாட்டுக்கள்

விளையாட்டு - 10
புத்தக கிரிக்கெட்


புத்தகங்கள் உதவியுடன் வீட்டினுள் ஆடும் கிரிக்கெட் தான் புத்தக கிரிக்கெட். இருவர் அமர்ந்து புத்தகத்தை மூடி திறக்கும் போது வரும் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு ஆடுவார்கள். எத்தனை இலக்க எண்ணாக இருந்தாலும் எண்ணின் இறுதி எண் கணக்கில் எடுக்கப்படும். உதாரணமாக 186 என்றால் 6 என்பதை கணக்கில் எடுத்து சிக்ஸர் என்று மகிழ்ந்து கொள்ளலாம். இதில் சைபர் வந்தால் ஆட்டம் அம்பேல்.. தோற்றதாய் அர்த்தம். அதாவது 140 என்றால் 0 கணக்கில் கொண்டு ஆட்டம் இழந்தவர் ஆவார். இப்பொழுது எல்லாம் கிரிக்கெட் அட்டைகள் சேர்த்து இந்த கால வாண்டுகள் விளையாடுகின்றார்கள். அது போல மல்யுத்த வீரர்களின் பட அட்டைகளும் சேர்த்துக் கொண்டு இதுபோல விளையாடுவார்கள்.

விளையாட்டு - 11
எந்தப் பக்கம்

இதுபோல புத்தகம் உதவியுடன் ஆடும் மற்றொரு விளையாட்டு "எந்த பக்கம்" என்னும் விளையாட்டு. இருவர் அமர்ந்து புத்தகம் திறக்கும் முன்னர் யாருக்கு எந்த பக்கம் என்று தீர்மானித்து பின்னர் திறக்க வேண்டும். இல்லையென்றால் முதல் பக்கத்தில் இருந்து அடுத்த பக்கம் போகும்முன் யாருக்கு எந்த பக்கம் என முடிவு செய்து பின் திறப்பார்கள். அதில் வரும் படங்களை வைத்து கற்பனையால் தொடரும் விளையாட்டு இது. உதாரணமாக ஒருவருக்கு வந்த பக்கத்தில் புலி மற்றவருக்கு வந்தது பூனை என்றால் புலியை வைத்துக்கொண்டு நான் அதை செய்வேன் இதை செய்வேன் என்று ஜம்பம் அடித்துக் கொள்வார்கள். இப்படியே அந்த கற்பனை சின்ன சண்டையாய் கூட வளர்ந்து விடும். அதே ஒரு கார் என்றால் என்கிட்ட கார் இருக்கும் காரில் அங்க போவேன் நீ சைக்கிளில் வந்து என்னை பிடிக்க முடியாது என்ற ரேஞ்சில் போகும் விளையாட்டு.

விளையாட்டு - 12
என்ன பிடிக்கும்

என்ன பிடிக்கும் என்பதும் மேலே கூறிய படியான கற்பனை வளத்தை வளர்க்க உதவும் விளையாட்டு தான். இது ஒரு வார்த்தை விளையாட்டு. இதில் இருவர் பங்குகொள்வர். நானும் என் அண்ணாவும் ஆடியதால் இருவர் மட்டுமே ஆடி பழகி விட்டோம்.. எங்களுக்கு உணவு உண்ணும் போது இதுதான் பொழுதுபோக்கு.. பேசாமல் சாப்பிட சொல்லி திட்டு விழும். யார் கேட்டார்கள் திட்டையெல்லாம்... எங்கள் சுவாரசியம் விளையாட்டில் தான் இருக்கும்.
ஆட்டம் என்னவென்றால் ஏதாவது இரண்டு பொருள் மனதில் நினைக்க வேண்டும்.. கொஞ்சம் சம்பந்தம் இருக்க வேண்டும் இரண்டு பொருட்களுக்கும். பொருளின் முதல் எழுத்துக்களை நினைத்தவர் கூற வேண்டும். மற்றவர் அதில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.. அதன் பின் மேலே கூறிய பக்கம் விளையாட்டு போல கற்பனை விளையாட்டு தான்.
உ.தா: மனதில் கொண்டது ஆலமரம், மாமரம் என்று வைத்துக் கொள்வோம். என்ன கேட்க வேண்டுமென்றால்..
" உனக்கு ஆ பிடிக்குமா மா பிடிக்குமா"
பதில் : ஆ என்றால் ....
முதல் நபர் நினைத்ததை கூற வேண்டும்...
" அப்போ உனக்கு ஆலமரம் எனக்கு மாமரம்."
அதன் பின் ஆரம்பமாகும் விவாதம்.. நான் மாங்காய் சாப்பிடுவேன்.. நான் ஊஞ்சல் ஆடுவேன் என்று.. சில சமயம் நானும் என் அண்ணாவும் சமரசம் செய்து கொள்வோம்.. சரி நான் உனக்கு மாங்காய் தருகிறேன் அதுக்கு பதில் நான் ஊஞ்சல் ஆடிக் கொள்வேன் என்று.. (என்னமோ நிஜமாகவே அது நம்முடையது என்னும் ரீதியில் இருக்கும் எங்கள் விவாதம்.)
இதில் மனதில் நினைத்ததை வேண்டுமென்றே மாற்றும் அபாயம் உண்டு.. ஆ என்றால் ஆவாரச் செடி என்றும் மாற்றி விடலாம்.. இது அவரவர் திறமையைப் பொறுத்தது. ;) நான் அடிக்கடி என் அண்ணாவை மாற்றி விட்டான் என்று சண்டை பிடிப்பது வாடிக்கை. :)
இங்கே கூறிய விளையாட்டுக்கள் சும்மா நேரப் போக்கிற்கு என்றாலும்.. கற்பனை வளம் மிகுந்து இப்படி பிற்காலத்தில் எழுத ஏதுவாய் இருக்கும். :)

Friday, August 8, 2008

தளிர்கள் விளையாட்டுக்கள்

விளையாட்டு -9

தட்டாங்கல்


கழற்சிக்கல், கழிச்சாங்கல், தட்டாங்கல் , அம்மானை, ஐந்து கல் , கூலாங்கல் என்றெல்லாம் கூறப்படும் தட்டாங்கல் பெண்கள் ஆடும் விளையாட்டு. ஆண்களுக்கு பிரத்யோகமாய் கோலி, கிரிக்கெட் (ஆனால் பெண்களும் அதை ஆடுவதுண்டு :-) ) இருப்பது போல இது பெண்களுக்கான ஆட்டம்.

கற்களின் எண்ணிக்கை

ஐந்து கல் கொண்டும் விளையாடலாம் . ஏழு கல் கொண்டும் ஆடலாம். சில ஊர்களில் ஐநூறு கல் வைத்தும் விளையாடுவார்கள். கற்களின் எண்ணிக்கைக்கு கணக்கில்லை எனலாம்.

ஆரம்பிக்கும் முறை

ஆட்டத்தை யார் ஆரம்பிப்பது என்பதற்கு ஒரு வழி உண்டு. இரு குழுவாக பிரிந்து அணி தலைகளை தேர்ந்தெடுத்துக் கொண்டு அதில் ஒருவர் கற்களை கையில் எடுத்து மேலே வீசி அனைத்து கற்களையும் புறங்கையில் இயன்ற அளவு பிடித்து பின் அந்த புறங்கையில் தாங்கிய கற்களை மறுபடியும் உயரே வீசி கையில் பிடிக்க வேண்டும். அப்படி பிடித்த எண்ணிக்கை ஒற்றையெனில் அவர்கள் ஆட்டத்தை ஆரம்பிக்கலாம். இரட்டையெனில் அடுத்தவர் ஆரம்பிப்பர். சிலர் இது போல் அல்லாமல் சாதரணமாய் விளையாட ஆரம்பிப்பர்.

விளையாடும் முறை

கற்களை தரையில் பரப்பி முதலில் ஒவ்வொரு கல்லாய் கையில் எடுக்க வேண்டும் . சும்மா இல்லை ஒரு கல்லை மேலே போட்டு அது கீழே வரும் முன் கையில் ஒரு கல்லை எடுத்து கொண்டு கீழே வரும் கல்லை பிடிக்க வேண்டும். இப்படியாக அடுத்த சுற்றில் இரண்டு கல்லை சேர்த்து பிடிக்க வேண்டும் அதற்கு பின் மூன்று. சுற்றுகளில் ஒற்றையாய் மிஞ்சும் இறுதி கல்லை தனியே பிடிக்கலாம் . அதன் எண்ணிக்கை எப்படி அமையும் என்றால்...


ஐந்தில்
1 - 1
2 - 2 + 2
3 - 3 + 1
4 -4

ஏழில்
1 - 1
2 - 2 + 2 + 2
3 - 3 + 3
4 - 4 + 2
5 - 5 + 1
6 - 6
இது ஐந்து மற்றும் ஏழு கல் கொண்டு ஆடும் போது. ஆறில் பிடிக்க முடியாது விட்டுவிடும் வாய்ப்பு அதிகம் . இதில் ஒருவர் விட்டு விட்டாலோ தவறான எண்ணிக்கை எடுத்தாலோ அடுத்தவர் ஆட வேண்டும்.. இப்படி எத்தனை முறை வாய்ப்பை விட்டார்கள் எத்தனை முறை முழுவதுமாய் பிடித்தார்கள் என்று பார்க்க வேண்டும்.

மேற்கூறிய எண்ணிக்கைக்கு பின் கற்களை மேலே வீசி, பின் புறங்கையில் தாங்கி அடுத்தவரிடம் எந்த கல் என்று கேட்க வேண்டும். அவர் சுட்டிய கல்லை மட்டும் கையில் வைத்து மற்ற கற்களை கையை நெகிழ்த்தி கீழே தள்ள வேண்டும். பின் கையில் தங்கிய ஒரு கல்லை மறுபடியும் மேலே வீசி கீழே கிடக்கும் மற்ற கற்களை கையில் எடுத்து மேலிருந்து கீழே வரும் கல்லையும் பிடிக்க வேண்டும். பின் இரண்டு.. மூன்று இப்படியே இருக்கும் எண்ணிக்கை வரை.

நூற்றுக்கணக்கில் கற்கள் வைத்து விளையாடும் பட்சத்தில் ஒருவர் விட்டுவிட்டால் அடுத்தவர் சிதறி கிடக்கும் கற்களை கலைக்காமல் பிடிக்க ஆரம்பிப்பார்கள். இதில் அவர்கள் எடுத்த கல் அவர்களே வைத்தும் கொள்வார்கள். கற்கள் தீர்ந்ததும் அனைவரும் அவரவர் சேர்த்த கல்லை எண்ணுவார்கள். எண்ணிக்கையில் கடைசியாய் இருப்பவர் தன்னிடம் இருக்கும் கல்லை அனைத்தையும் பொதுவில் வைப்பார். உதாரணமாய் பத்து கற்கள் வைக்கிறார் என்றால் அனைவரும் தங்கள் சேமிப்பு கல்லில் இருந்து பத்து கற்கள் போட அதை வைத்து ஆட்டம் மறுபடியும் தொடரும். இறுதியில் கல் இல்லார் தோற்றார். கல் மிக சேர்த்தவர் வென்றார்.

இதில் கற்களை விசிறும் போது நாம் பிடிக்க இருக்கும் எண்ணிக்கைக்கு தக்க நெருங்கினபடியோ , கலக்கமாகவோ போடலாம் . கைகளுக்கு நல்ல பயிற்சியாகும். கவனமும் அவசியம். எத்தனை உயரமாய் கல்லை வீசுகிறோமோ அது திரும்பும் அவகாசத்தில் கீழே உள்ள கல்லை எடுக்க இலகுவாக அமையும். அப்படி எடுக்கும் போது மற்ற கற்களை தொடாமல் எடுக்க வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகளும் இருக்கும். இதில் பாடிக்கொண்டே விளையாடுவார்கள். நான் விளையாடும் போதே பாட்டு நின்று ஆட்டம் மட்டுமே எஞ்சியது . அந்த பாட்டு பின்வருமாறு..

தட்டாங்கி கொட்டும் புள்ள

தயிரும் சோறும் திங்கும் புள்ள

அப்பம் சுட்டா திங்கும் புள்ள

அவல் இடிச்சா திங்கும் புள்ள

அங்கும் இங்கும் பார்க்கும் புள்ள

அவலை வாரித் திங்கும் புள்ள!

(நன்றி நம்பிக்கை ராமா பாடலுக்கு. )

Thursday, August 7, 2008

தளிர்கள் விளையாட்டுக்கள்

இந்த இழையில் இடம்பெறும் விளையாட்டுக்களில் இருந்து ஏதேனும் பொருளை உபயோகப்படுத்துவதாய் அமைந்திருக்கும். காகிதம், கல், உடைந்த வளையல் இப்படியாக...

விளையாட்டு - 7

உருண்டை


உள்விளையாட்டில் ஒன்றான உருண்டை என்னும் விளையாட்டு ஆட ஒரு சிறு பொருள் வேண்டும், காகித துண்டு அல்லது ஏதேனும் சிறு பஞ்சோ ஏதாவது கைக்கு அடக்கமாய். அனைவரும் சுற்றி அமர்ந்து ஒருவரை மட்டும் குனிய வைத்து முதுகில் அனைவரும் கையை பரப்பி கொள்வார்கள். ஒருத்தர் மட்டும் எண்ணிக்கொண்டே ஒவ்வொரு கையாய் அந்த காகித துண்டை வைத்து எடுப்பர்.(ஒரு கையில் வைத்து விட்டு இன்னும் வைக்காதது போல சுற்றி சுற்றி எண்ணி குனிந்தவரை முட்டாளாக்க முயல்வதும் உண்டு).பின்னர் ஒரு கையில் வைத்துவிட்டு அனைவரும் ஒரு சேர கையை எடுத்து விடுவார்கள் . பின்னர், இரு கைகளையும் சாமி கும்பிடுவது போல் குவித்து மேலும் கீழுமாக தேய்ப்பார்கள் .

உருண்டை தருண்டை என்று கூறிக்கொண்டே தேய்ப்பார்கள்.

ஒரு கை கீழே ஒரு கை மேலே என்ற ரீதியில் . இதில் யாரோ ஒருவரிடம் அந்த காகித தக்கை இருக்கும் . அதை தான் குனிந்தவர் கண்டுபிடிக்க வேண்டும். இப்படி நாங்கள் விளையாடும் போது வாண்டுகள் இது தான் சாக்கு என்று குனிந்து அருகிலிருப்பவர் மடியில் தூங்கி விடுவர்...(நானும் தான்) கண்டுபிடிக்க கூடாதென்று அத்தனை நேரம் உருட்டினால் என்ன பண்ணுவதாம். எழுந்து திரு திரு வென விழித்து பின்னர் ஒவ்வொரு கையாய் ஆராய்ந்து அதிலும் என்னமோ காகிதம் கீழே விழ போக அதை தடுத்து திரிப்பது போல் பாவனை எல்லாம் செய்வர். தவறாக கூறினால் மறுபடியும் குனிய வேண்டும் ..

தூங்காது நன்கு கவனித்து சரியாக கண்டுபிடித்தால் மாட்டியவர் குனிய வேண்டும். கவனிப்பு திறனை தான் இந்த ஆட்டமும் வளர்க்கிறது .. நாங்கள் ஆடும் போது சில ஆத்மாக்கள் உதவுவது போல தவறாக கண்ணை காட்டுவார்கள்.. நாமும் அதை நம்பி கை காட்ட.. ங்னே என்று முழிக்க வேண்டியதாய் இருக்கும். படு தமாஷான விளையாட்டு இது.

விளையாட்டு - 8

ஜோடி சேர்த்தல்

இந்த விளையாட்டு சிறுமகளிர் உடைந்த கண்ணாடி துண்டுகளை கொண்டு விளையாடும் வகையறா. உடைந்த கண்ணாடி துண்டுகளை சேகரித்து அதை எல்லாம் ஒரு டப்பாவில் பத்திரப்படுத்தி வைப்போம்.. சில நேரங்களில் சிறிது கீறல் விட்ட வளையலையும் ஆட்டத்திற்கு பயன்படுத்தும் பொருட்டு துண்டாக்குவது உண்டு. அதுவும் ஜோடி ஜோடியாக வருமாறு உடைப்போம்.இப்படியாக கலர் கலராய் சேர்த்த வளை துண்டுகளை எல்லாம் ஒருங்கே கையில் எடுத்து பின் சிதறடித்து ஜோடி துண்டுகளை மட்டும் சேர்த்து எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கும் போது மற்ற வளையல் துண்டுகள் மீது படாமல் எடுக்க வேண்டும். அது தான் ஆட்டமே.

இப்படி வளையல் எல்லாம் சேர்த்து கலைடாஸ்கோப் செய்வதும் உண்டு.. சதுர நீள குழாய் போன்ற அமைப்பில் அட்டையை வெட்டி ஒட்டி உருவாக்கி அதனுள் கண்ணாடி துண்டுகளை எல்லாம் போட்டு கலர் பேப்பர் ஒட்டி அழகு படுத்தி அதனில் நம் விழி பதித்து பார்க்கையில் கலர் கலர் பூக்கள் விரிந்து மாயம் காட்டிடும்.. நான் ஏனோ அதை முயற்சிக்க வில்லை. விதம்விதமாக வண்ணக் கோலங்களாய் விரிந்து மனதை அள்ளிக்கொள்ளும்.. சிறு வயதில் அதை பார்க்க நடக்கும் போட்டி இருக்கிறதே... அதெல்லாம் ஒரு காலம்.. :)

Wednesday, August 6, 2008

விளையாட்டு - 4.
தத்தைக்கா

கைகள் மட்டும் பயன்படுத்தி ஆடும் ஆட்டங்களில் இது முதன்மை வாய்ந்தது என்றே கூறலாம். சிறார் கூடி அனைவரும் கைகளை தரையில் பரப்பி ஒருவர் மட்டும் ஒவ்வொரு கையாய் பாடிக்கொண்டே தொட்டு செல்வர், பாடல் முடியும் போது யார் கையை தொடுகிறோமோ அவர் கையை எடுத்து விடுவர். அப்படி ஒரு நபர் இரு கையும் எடுக்கப்பட்டால் ஜெயிப்பர். அந்த பாட்டு பின்வருமாறு.
தத்தக்கா புத்தக்கா
தவளை சோறு
எட்டு எருமை,
எருமை பாலு
தூக்க மரத்துல துணியக் கட்டி
கூப்பிடுங்க குலவுடுங்க
குறத்தி மக்கள கையெடுங்க...

இதில் கையெடுங்க என்று ராகத்தோடு முடிப்பதே தனி அழகு தான். பல காலம் தொட்டு இன்று வரை கிராமங்களில் சிறு குழந்தைகள் விளையாடும் விளையாட்டு. இந்த ஆட்டத்தில் எத்தனை பேர் வேண்டுமானாலும் இருக்கலாம்.ஆனால், ஆறு பேருக்கு மேல் இருந்தால் கொஞ்சம் சிரமம்தான். இதில் யார் தத்தக்கா புத்தக்கா பாடுகிறார் என்பது முக்கியம். சிலர் வேண்டுமென்றே கை... எ... டு...ங்..க என்று நீட்டி முழக்கி வேண்டியவருக்கு உதவவும் முடியும். :-) இந்த ஆட்டத்தின் அடிப்படை என்னவோ சின்னக் குழந்தைகளுக்கு தொடச்சியாக புதிய வார்த்தைகளை அறிமுகப்படுத்துவதுதான் என்று தோன்றுகிறது. புதிதாகப் பேச ஆரம்பிக்கும் குழந்தைகள் இந்த ஆட்டத்தை கூர்ந்து கவனித்து புதிதாகக் கற்றுக் கொள்வார்கள் இந்த வார்த்தைகளை. தத்தக்கா புத்தக்கா என்று பேசும் குழந்தைகளும் தத்தைக்கா புத்தைக்கா விளையாடி இலகுவாக பேச ஆரம்பித்து விடுவர்.

விளையாட்டு - 5.
குத்து விளையாட்டு

இந்த விளையாட்டு இருவர் மட்டுமே பங்குபெறும் ஒரு விளையாட்டு. ஒருவர் இரு கைகளையும் சேர்ந்தாற் போல வைக்க மணிக்கட்டு பகுதி ஒருங்க, விரல் பகுதி விரிந்து ஒரு வாயில் போல வைக்க அதாவது பந்தை பிடிக்க வைத்திருப்பது போல, மற்றவர் தன் விரல்கள் மடக்கி குத்த ஆரம்பிப்பர்.
அம்மா குத்து
அப்பா குத்து
மா குத்து
மஞ்ச குத்து
மகிழங்குத்து
பிள்ளையார் குத்து
பிடி குத்து
இப்படி பல குத்துக்களை விட்டு பிடி குத்து சொல்லும் போது போது கையை விரித்து குத்துக்களை பெறுபவர் அந்த கையை பிடித்து கொள்ள வேண்டும். இது போன்ற விளையாட்டுக்கள் குழந்தைகளின் கவனிப்பு திறனை அதிகரிக்கிறது. எப்போ பிடி குத்து சொல்வார்கள் என்று கவனமாய் இருப்பார்கள். ஏனெனில் மாத்தி மாத்தி விருப்பம் போல் சொல்லலாம். மா குத்து சொல்லி விட்டும், உடனே பிடி குத்து சொல்லலாம். மேலும் கைகளுக்கு இது நல்லதொரு பயிற்சியும் கூட.

விளையாட்டு - 6.
கொக்கு பறபற
கொக்கு பறபற என்பதும் ஒரு சிறு விளையாட்டு தான். சந்திரமுகி படத்தில் வரும் பாடலை பார்த்ததும் இந்த விளையாட்டு தெரிந்தவர்களுக்கு நினைவுக்கு வந்து இருக்கும் என்று நினைக்கிறேன். இதில் எத்தனை பேர் வேண்டுமானாலும் பங்குபெறலாம். அனைவரும் வட்டம் அமைத்தமர்ந்து, ஒருவர் மட்டும் ஒவ்வொரு பறவை மற்றும் சில பெயர்களை கூறி பறபற என்று கூறுவர். கூறப்பட்டது பறவையாய் இருக்கும் பச்சத்தில் பறப்பது போல் இரு கைகளையும் முகத்தின் முன்பு வைத்து விசிறுவது போல் மற்றவர்கள் கையசைக்க வேண்டும், உதாரணமாக நாய் பறபற என்று கூறினால் கையசைக்க கூடாது. அப்படி தன்னை மறந்து அசைப்பவர் தோல்வி அடைவர். இது கூட கவனிப்பு திறன் மற்றும் கைகள் பயிற்சிக்கு ஏற்றதொரு விளையாட்டு.
எ.கா :
கொக்கு பறபற
கோழி பறபற
மைனா பறபற
சேவல் பறபற
செவந்தி பறபற..
கவனிக்க செவ்வந்தி பூ பறக்காது. இதற்கு கையசைத்தால் அவர் தோற்றவர் ஆவர். சமயத்தில் வானம் பறபற என்று கூறி சிலர் வானம் பறக்காது என்றும், சிலர் மேகத்த பாரு பறந்து போகுது என்றும் விவாதிப்பர். இதே போல் தான் பச்சை பாம்பையும்.. ஏனெனில் பச்சை பாம்பு பறந்து வந்து கண்ணை கொத்தும் என்று நம்பியதால்.. :) இப்படியாக விவாதம் செய்யும் பழக்கம் கூட அப்போதே ஆரம்பித்து விட்டது.
நாம் ஆடிய ஒவ்வொரு விளையாட்டுக்களும் ஏதோ ஒரு விதத்தில் பயனுள்ளதாகவே இருந்தது எனலாம்

Tuesday, August 5, 2008

தளிர்கள் விளையாட்டுக்கள்
தளிர்கள் விளையாட்டுக்கள்

முதன் முதலாய் எனக்கு அறிமுகமான விளையாட்டு. :-)

விளையாட்டு - 1
பருப்பு கட
பருப்பு கட பருப்பு கட என்று உள்ளங்கையை பள்ளமாக்கி அதில் கை முட்டினால் கடைவது போல் செய்து பின் ஒவ்வொரு விரலாய் " இது சோறு, இது குழம்பு, இது பொரியல் , இது அவியல், இது அப்பளம்' என்று ஐந்து விரல்களுக்கும் கூறி அத்தனையும் கொஞ்சம் எடுத்து நடு கை பகுதியில் இட்டு பிசைந்து பின் "இது அம்மாக்கு, இது அண்ணாவுக்கு , இது அக்காவுக்கு,இது மாமாக்கு இப்படி அக்கம் பக்கம் இருப்பவர்" எல்லாம் கூறி இறுதியில் அப்பாவுக்கு கொண்டு செல்லும் வழி எங்கே என்று தேடி அலைந்து பின்னர் "இந்தோ இருக்கு" என்று விரல் முடிவில் இருந்து மேல்நோக்கி ஊர்ந்தவாறே
" நண்டூறுது நரியூறுது கல்லூறுது மண்ணூறுது" என்று கூறிக்கொண்டே.. அக்குள் வரை சென்று "கிச்சு கிச்சு" மூட்டி அந்த குழந்தை கெக்கே புக்கே என்று சிரிக்கும் அழகில் நாமும் சிரித்து... அருமையான சின்ன விளையாட்டு இது.
இந்த விளையாட்டுக்கள் உறவுமுறைகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கவும், பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தவும் உதவுவதாய் நான் நினைக்கிறேன். மேலும் இந்த விளையாட்டு வீட்டினுள்ளிருந்தே விளையாட உகந்தது. இந்த விளையாட்டு பெரும்பாலும் மழலையர்களுக்குத்தான் பொருத்தமாக இருக்கும் . இந்த ஆட்டத்திற்கென்று பிரத்யோகமாக எதுவும் தேவை இல்லை.

விளையாட்டு - 2
சங்கு சக்கரம

இதுவும் ஒரு சிறு விளையாட்டு வகைதான். குழந்தைகள் கூடி அனைவரும் தங்கள் இரு கைகளையும் தரையில் பரப்பி ( உள்ளங்கை தரை நோக்க ) ஒருவர் மட்டும் சங்கு,சக்கரம்,ங்கு, நாகம்,பால் என்று ஒவ்வொரு விரலாய் எண்ணி பால் என்றும் முடியும் விரலை மடக்கி கொள்வர்.அப்படியாக ஒரு கையில் அனைத்து விரலும் மடக்கப்பட்டால் அவர் ஜெயிப்பர். இது சுற்று போல வரிசையாக எண்ணப்படும் ஒரு விளையாட்டு .
இந்த விளையாட்டுக்கும் தனியாக ஏதும் தேவையில்லை. நினைத்த நேரத்தில் நினைத்த பொழுதில் இந்த ஆட்டத்தை ஆட முடியும். இதுவும் உள்விளையாட்டுதான். சங்கு சக்கரம் என்றெல்லாம் சொல்லி விளையாடுவது தமிழ் வார்த்தைகளை மனதில் கொள்ளச் செய்யும் எளிய உபாயமாகத்தான் படுகிறது.

விளையாட்டு - 3
மூக்குபொடி
இந்த விளையாட்டில் இருவர் பங்குகொள்வர். ஒருவர் சாமி கும்பிடுவது போல கைகுவித்து வைத்திருக்க , மற்றவர் கைகளின் நடுவில் இருந்து மூக்குபொடி எடுத்து மூக்கில் வைத்து போடுவதாய் ஒரு பாவனை செய்து, சடாரென கைகளில் அறைவர். அதை உணர்ந்து சுதாரித்து கையை நாம் எடுத்து விட வேண்டும். அப்படி அறைபட்டால் மறுபடியும் அடிபட்டவர் கைகுவித்து வைக்க வேண்டும்.. அடி தப்பினால் அவர் கைகுவிக்க விளையாட்டு தொடரும்..
இந்த விளையாட்டு உடல் உறுப்புகளின் அசைவை ஊன்றி கவனிக்க ஏதுவான ஆட்டம். ஆங்கிலத்தில் ரிஃப்ளெக்ஸ் என்று சொல்வாரக்ளே, அதனைச் சோதிக்கும் பயிற்சியாகத்தான் இதனை சிறார்களுக்குப் பெரியவர்கள் சொல்லித் தந்திருப்பார்கள். அதோடு மட்டுமல்லாமல் கை அசைவை கவனிப்பதில் ஒருக்கம் அதிகரிக்கும் என்று நினைக்கிறேன்

Sunday, August 3, 2008



தளிர்கள் விளையாட்டுக்கள்

நான் சிறுவயதில் விளையாடிய விளையாட்டுக்கள் ஞாபகம் இருந்த வரையில் இங்கு எழுதுகிறேன். இதே விளையாட்டுக்கள் ஊருக்கு ஊர் மாறுபட்டிருக்கலாம் இல்லை மருவியிருக்கலாம். தெரிந்தவர்கள் இங்கு இட்டால் மகிழ்ச்சி.விளையாட்டுக்கள் வீட்டினுள் விளையாடுவது ஒரு வகை. வீட்டிற்கு வெளியே சென்று ஆடுவது மற்றொன்று. (indoor / outdoor games). சிறுபிள்ளைகள் (ஆண், பெண்)அனைவருமாய் ஆடிய விளையாட்டுக்களில் எனக்கு ஞாபகத்தில் நின்ற, சிறு சிறு விளையாட்டையும் தருகிறேன் கீழே.. பின் ஒவ்வொன்றை பற்றியும் விலாவாரியாக பேசுவோம்.

வீட்டினுள் ஆடும் ஆட்டங்களில்

1.தாயம், சோவி
2.பல்லாங்குழி
3. ஆடுபுலிஆட்டம்
4.மூன்றுகல் ஆட்டம்
5.செப்புசாமான்
6.கூட்டாஞ்சோறாக்கல்
7.தத்தைக்கா..
8.சங்கு சக்கரம்
9.பருப்புகட
10.கள்ளன் போலீஸ்
11.கிச்சு கிச்சு தாம்பலம்
12.உருண்டை...
13.தட்டாங்கல்
14.ஜோடி சேர்த்தல்( வளையல் துண்டுகளால்)
15.புத்தக கிரிக்கெட்
16.என்ன பிடிக்கும் (வார்த்தை விளையாட்டு)
17.எழுத்து கண்டுபிடித்தல்
18.கட்டம் நிரப்புதல்
19.நாடு பிடித்தல்
20.சீட்டு கட்டு
21.பெயர் நிரப்பல்
22.கொக்கு பறபற
23.மூக்குபொடி
24.குத்துவிளையாட்டு.
25.அக்கக்கா சினுகோலி
இப்படி சில

வீட்டிற்கு வெளியே
1.கண்ணாமூச்சி (இதிலே பல வகை உண்டு பல பாட்டும் உண்டு.)
2.கபடி
3.பாண்டி
4.காதுல பூ சொல்லி
5.பூ பறிக்க வருகிறோம்
6.ஒரு கொடம் தண்ணியெடுத்து (விளையாட்டின் பிரத்யோக பெயர் மறந்தபடியால் அதன் முதல் வார்த்தையை இடுகிறேன்)
7.பாட்டியும், ஊசியும்
8.தோசை வார்த்தல்
9.கொக்கோ
10.நொண்டி
11.பச்சைக்குதிரை
12.எரிபந்து
13.கோலி
14.கிட்டிபுள் (அ) குச்சி-கம்பு
15.கவட்டபுள்
16.பட்டம்
17.காத்தாடி
18.தட்டான் பிடித்தல்(கிராமத்தில் தட்டான், ஓணான் பிடிப்பதெல்லாம் சகஜம்)
19.டயர் (சைக்கிள் டயர்) ஓட்டுதல்
20.நுங்கு வண்டி
21.பேருந்து விளையாட்டு
22.எட்டாங்கோடு
23.சோடா போடுதல்
24.மாட்டுவண்டி
25.கயராட்டம் (ஸ்கிப்பிங் வகையறா)
26.கள்ளன் போலீஸ்
27.பந்தாட்டம்
28.தொட்டுபுடிச்சி
29.ஓட்டப்பந்தயம்
30.நீச்சல் (தண்ணீர் ஆட்டம்)
31.களிமண் பொம்மை செய்தல், மணல் விளையாட்டுகள்
32.பெயர் எழுதுதல் (வேம்பங்கொட்டை பால் கொண்டு)
33.ஊஞ்சல், ஆலமரவிழுது ஊஞ்சல்
34.தென்னை வண்டி
35.கல்லா மண்ணா
36. உஸ்தி
37.பம்பரம்
இன்னும் நான் மறந்தவை நிறைய இருக்கலாம். அனைத்துமே விளையாடியது கனவாகி போனது இப்போது. இத்தனை ஆட்டங்கள் இருக்க, இப்போதைய குழந்தைகள் ஏனோ தொலைக்காட்சி, வீடியோ விளையாட்டு, என்று இருக்கையில் இதை பற்றி அவர்கள் அறிந்து கூட இருக்க மாட்டார்களே என்ற கவலையில் தோன்றியது தான் இந்த கட்டுரை. அப்போழுதும் செஸ், கேரம்போர்ட் என இருந்தாலும் குழந்தைகளால் பெரிதும் விரும்பப்பட்ட விளையாட்டுகள் இவை என்று தான் தோன்றுகிறது. இந்த விளையாட்டெல்லாம் தெருவில் ஆட பள்ளியில் கொக்கோ, அனைத்து பந்து விளையாட்டுக்கள், செஸ், ஷட்டில் கார்க், முயுசிக்கல் சேர், கேரம், ரிங்க் என அனைத்து விளையாட்டுகளும் இருந்தது. நான் கண்ட இந்த விளையாட்டுக்கள் மறக்காமல் இருக்கவும் அழிந்துவிட கூடதென்ற ஆதங்கத்திலும் எழுத விழைகிறேன். இனி ஒவ்வொன்றாய் பார்க்கலாம்.

Sunday, July 27, 2008

ஒவ்வொரு பிராயங்களின் முடிவிலும்
குற்றவுணர்வின் பக்கங்கள் நிரப்பப்படுகின்றது
திருப்பவியலாத கனத்துடன்...

வேகம் தாங்கிய பொழுதுகள்
பொருட்படுத்துவதில்லை எதையுமே
மறந்த பாவனையில்...

முடிவற்ற வரிகளென நீளும்
வாழ்வுதனில் ஒருவேளை மறக்கக்கூடுமோ?
நாளும் புதுப்பிக்கப்படும் நினைவுகள் மீறி!

நன்றி keetru.com
http://www.keetru.com/literature/poems/silvandu.php