Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, August 18, 2008

உன்னிடம் சொல்லிவிடவென்று
உருவாக்கி வைத்த வார்த்தையொன்று
சொல்லப்படாமலேயே காத்திருக்கிறது
உனை கடக்கையில்,
வழக்கமான புன்னகையில்,
மணிக்கணக்கான உரையாடலில்,
ஒரு பொழுதினில்
என் கண்களோ, செய்கைகளோ
ஏதோ ஒன்று உணர்த்தியிருக்கக்கூடும்
நான் சொல்லிவிட துடிக்கும் வார்த்தைதனை
பாசாங்கில் பவனி வரும்
உன்னிடம் கூட எனக்கான வார்த்தை
தவமிருக்ககூடும்..

Sunday, July 27, 2008

ஒவ்வொரு பிராயங்களின் முடிவிலும்
குற்றவுணர்வின் பக்கங்கள் நிரப்பப்படுகின்றது
திருப்பவியலாத கனத்துடன்...

வேகம் தாங்கிய பொழுதுகள்
பொருட்படுத்துவதில்லை எதையுமே
மறந்த பாவனையில்...

முடிவற்ற வரிகளென நீளும்
வாழ்வுதனில் ஒருவேளை மறக்கக்கூடுமோ?
நாளும் புதுப்பிக்கப்படும் நினைவுகள் மீறி!

நன்றி keetru.com
http://www.keetru.com/literature/poems/silvandu.php

Wednesday, October 24, 2007

வரைமுறைகளும்
வரையரைகளும்
வரவேண்டாம்
நமக்குள்ளும்
நமது நட்புக்குள்ளும்...

இதுவென்றும்
அதுவென்றும்
பெயர் சூட்டவேண்டாம்
இன்னதென்றறியா
நமது பந்தத்திற்கு...

நாய் தூற்றும்
நரி தூற்றும்
என்று புதைக்க நினைத்தாலும்
முல்லையாய் சிரித்து
முழுவதுமாய் ஆக்ரமிக்கும்
நமது நட்பை
எங்கிட்டு அடைப்பது
என் மனம் மறக்கும் வண்ணம்?
உணர்வுகளால்
உருவான என்
உலகத்தில்
உயர உயர பறந்திட
வீழும் நொடியொன்றில்
விசுக்கென பற்றி
மேலிழுத்து சென்றாய்
வானம் தாண்டிய வெளியில்
பிரஞ்ஞைகள் அற்று சுற்றி திரிந்திட
கணப்பொழுதில்
கண்கள் தாண்டிப் போகிறாய்
கண்முன்னே நீ
காணாமல் போவதை
கண்ணுற்றவாறே
சிறகு குவிக்கிறேன்...
நாளாக நாளாக‌
கரையான் அரித்த
உத்தரத்தினின்றும்
உதிரும் துகளாய்
உதிர துவங்குகின்றன
உன் நினைவுகள்
என்னில் இருந்து...

Wednesday, October 3, 2007

முற்றுப்புள்ளி வைக்கவே
முயல்கிறோம்
ஒவ்வொரு முறையும்
மறுகும் மனம்
ஜெயித்து
முடிவுகள் தோற்க‌
வாழ்கிறது நம் பந்தம்..
நீயும் முயன்றிருப்பாய்
என்னில் விழும்
உன் மனதை தடுக்க
எந்த கணத்தில்
என் ஆழ்மனம்
அதிகப்பிரசங்கியானது என்று
ஆலோசித்து தோற்கிறேன்
அடிக்கடி ஆக்ரமிக்கும்
உன் நினைவுகளால்...
அன்றும் இதைப்போலவே
அமர்ந்து மழை இரசித்தேன்
அன்று உன்னோடும்
இன்று உன் நினைவுகளோடும்
இனிமையாகவே இருக்கிறது
எனது மழைக்காலங்கள்!

Sunday, September 2, 2007

எல்லா ஊர்களிலும்
காக்கைகள் தவறுவதில்லை
வாரியட்குச்சிகள்
தேடி முட்கூடு செய்யவும்
ஓயாது இரைந்து
ஒருவாய் உணவு கேட்கவும்
குப்பைகள் குதறி
மரித்த எலிகள் புசிக்கவும்
வீட்டருகே பறந்து
உன் வரவு கூறவும்..

Monday, August 27, 2007

மழை வெறித்த வானமாய்
என் மனம்
உன்னுடன் பேசிய மறுகணத்தில்
வானவில் வர்ணமாய்
உன் நினைவுகள் மட்டும்...
சிறு வயது முதலே
சிநேகிதம் கொண்டோம்
உனக்குள் ஒளிந்த
பாட்டியின் முகதேட்டல்
நிழலாய் தொடரும் இன்றும்...
உன் பிம்பம் தொடவே
நீர் இறைக்கிறேன் நித்தமும்
சலனமற்ற அதிர்வுகளில்
சந்தோஷம் கண்ட நினைவுகள்
நீங்குவதில்லை என்றுமே....

மனம் சோர்ந்த மாலைகளில்
ஒளி பாய்ச்சி என் உள்ளத்து
இருள் துடைத்து
மெளனியாய் கூறுகிறாய்
துணை நானென்று...

எனது சோகம், கண்ணீர்
சந்தோஷம் இப்படி
உணர்ந்த உணர்வுகளுக்கு
எல்லாம் என்றும்
நீ மட்டும் சாட்சியாய்...

மனம் கனத்த வேளையில்
கடந்து போன நியாபகங்களின்
மிச்சமாய் காணும் ஆவலில்
வெளிவந்தேன்
நீயற்ற வானம் வரவேற்றது...

மனம் மாறும் மனிதர்
நிறம் மாறும் பூக்கள்
நிஜம் தொலைக்கும் உறவுகள்
கண்டு நீயும் மறந்தாயோ
நம் நீண்ட கால நட்பினை?
நிலவே முகம் காட்டு...

Wednesday, June 20, 2007

உயரத்தில் பிறந்து
உற்சாகமாய் ஆடி
உயிருக்குள் புகுந்து
எச்சத்தின் மிச்சமாய்
மண்ணுள் புதைந்து
காலம் கனிய
கண்மூடி கனா கண்ட
ஒருநாளில்...
சிறுதுளியின் ஸ்பரிசம்
சிலிர்க்க வைத்தென்னை
உயிர்த்திருக்கிறேன் என்று
உணரவைத்தது...
உயிர் துடிக்க
உருப்பெறுகிறேன்
புதிதாய்
புதிய தாயாய்
அகன்று உயர்ந்த என்னை
அதிசயித்து பார்க்கிறேன்!
மலர்ந்து பூரணமடைந்த வேளையில்
கனி சுமந்து காத்திருக்கிறேன்
என் போல் ஒரு உயிர்
என்னில் இருந்து உருவாக...
விண்ணில் தேடுகிறேன்
இரைதேடும் பறவையை..

Tuesday, June 12, 2007

எட்டா தூரத்தில் நீ இருந்தாலும்
எட்டும் உன் குரலில் மகிழ்ந்து
என்னை மறக்கும் தருணத்தில்
ஒற்றையா இரட்டையா என்று
வினா தொடுத்து விதியின் பெயரில்
வெற்று சண்டை எய்கிறாய்..
என்னுள் நான் நொறுங்குவதை
உணராத காற்றாய்
கடந்து செல்கிறாய்..
என் முகத்தில் அறைந்த வண்ணம்...

Sunday, June 10, 2007

ஒவ்வொரு நாளும் முயல்கிறேன்
உனக்காக ஒரு கவிதையை..

உன் நினைவுகளில் விழும்
எனது நினைப்புகளின் தாக்கம்
உயிரில் சென்று உறையும்...

முடிந்து போன தருணங்களின்
முடிவற்ற மகிழ்ச்சியின் மிச்சம்
மூச்சோடு கலந்திருக்கும்..

யோசிப்பின் மீட்பு
எந்த நாளின் முடிவிலும்
கிடைப்பதில்லை...

ஒவ்வொரு நாளும் முயல்கிறேன்
உனக்காக ஒரு கவிதையை..

Saturday, June 2, 2007

நீரின்றி அமையாது உலகு
நீயின்றி அமையாது நட்பு..
நீயற்ற என் நாட்கள்
நிர்பந்தத்தோடு நகர்கின்றன...

காற்றாய் வந்தாய்
கனவாக உறைந்தாய்
காலம் கடந்திட்டாலும்
காயாது நட்பின் பசுமை...

வாழ்வின் நிதர்சனத்தில்
வழி மறந்த பறவையாய்
வலியோடு பறக்கிறோம்
வனாந்திரத்தில் தனித்திருக்கும்
நம் நட்பை காணாதது போல்...

Thursday, May 31, 2007

எத்தனை முயன்றாலும்
தவிர்க்க முடிவதில்லை
கப்பலிட்ட மழைநாளிலே
காலால் ஓடையில் துடுப்பிட்டு
மூழ்காத கப்பல் கண்டு
முழுக்க நனைந்த ஈரத்தினை...
கண்ணாடி வழியே
மழை ரசிக்கும்
மகனைப் பார்க்கையில்...

Thursday, May 24, 2007

யாரோ செய்கின்ற தப்பிற்கு
தண்டனைகள் மட்டும்
தவறாது எனக்கு...

நீ கண்ட காயங்களின்
வலிகளை என்னிடம்
வடுக்களாய் தேடுகிறாய்...

உனது அவமானங்கள்
எப்பொழுதுமே என் அழுகை
ருசிக்க தயங்குவதில்லை...

உனது ரணங்களை வேரறுக்க
என்னுள் விதைக்கிறாய்
அறுவடை ஆசையில்....

அத்தனையும் தூசியாய் தெரிகிறது
எப்பொழுதாவது நீ காட்டும்
அன்பின் முன்...

Monday, May 21, 2007

மனதிற்கு பசியெடுக்கிறது
எதை தின்றால் பசிதீரும்
என்று யோசித்து மடிகிறது மூளை...
சேர்த்து வைத்த உன் ஞாபகங்களை
சிறிது சிறிதாய் பிய்த்து
தின்ன ஆரம்பிக்கிறது மனசு..
எதுவுமற்ற வெறுமையில்
என்ன கிடைக்கும் என்று
தடுமாறும் மனதிற்கு
நீ அளித்த பிரிய உணவு ஏனோ
புசிக்கப் பிடிப்பதில்லை.....

Thursday, May 17, 2007

ஒரு நிமிடம் கூட பிரியாமல்
ஒன்றாகவே இருந்தோம்
அன்றில் பறவை
தோற்கும் வண்ணம்....

இன்றோ
ஒரு நிமிடம் என்னை நினைப்பாயா
என்ற வினா எழுப்பி
காத்து நிற்கிறேன்
வழி மாறிய செம்மறி ஆடாய்..

Monday, May 14, 2007

தேன்சிட்டு நீ என்று
புன்னகையோடு காத்திருந்தேன்
கடந்தையாய் கொட்டியென்
காதல் கொல்கிறாய்.....!!