Wednesday, October 24, 2007

வரைமுறைகளும்
வரையரைகளும்
வரவேண்டாம்
நமக்குள்ளும்
நமது நட்புக்குள்ளும்...

இதுவென்றும்
அதுவென்றும்
பெயர் சூட்டவேண்டாம்
இன்னதென்றறியா
நமது பந்தத்திற்கு...

நாய் தூற்றும்
நரி தூற்றும்
என்று புதைக்க நினைத்தாலும்
முல்லையாய் சிரித்து
முழுவதுமாய் ஆக்ரமிக்கும்
நமது நட்பை
எங்கிட்டு அடைப்பது
என் மனம் மறக்கும் வண்ணம்?
உணர்வுகளால்
உருவான என்
உலகத்தில்
உயர உயர பறந்திட
வீழும் நொடியொன்றில்
விசுக்கென பற்றி
மேலிழுத்து சென்றாய்
வானம் தாண்டிய வெளியில்
பிரஞ்ஞைகள் அற்று சுற்றி திரிந்திட
கணப்பொழுதில்
கண்கள் தாண்டிப் போகிறாய்
கண்முன்னே நீ
காணாமல் போவதை
கண்ணுற்றவாறே
சிறகு குவிக்கிறேன்...
நாளாக நாளாக‌
கரையான் அரித்த
உத்தரத்தினின்றும்
உதிரும் துகளாய்
உதிர துவங்குகின்றன
உன் நினைவுகள்
என்னில் இருந்து...

Wednesday, October 3, 2007

முற்றுப்புள்ளி வைக்கவே
முயல்கிறோம்
ஒவ்வொரு முறையும்
மறுகும் மனம்
ஜெயித்து
முடிவுகள் தோற்க‌
வாழ்கிறது நம் பந்தம்..
நீயும் முயன்றிருப்பாய்
என்னில் விழும்
உன் மனதை தடுக்க
எந்த கணத்தில்
என் ஆழ்மனம்
அதிகப்பிரசங்கியானது என்று
ஆலோசித்து தோற்கிறேன்
அடிக்கடி ஆக்ரமிக்கும்
உன் நினைவுகளால்...
அன்றும் இதைப்போலவே
அமர்ந்து மழை இரசித்தேன்
அன்று உன்னோடும்
இன்று உன் நினைவுகளோடும்
இனிமையாகவே இருக்கிறது
எனது மழைக்காலங்கள்!

Sunday, September 2, 2007

எல்லா ஊர்களிலும்
காக்கைகள் தவறுவதில்லை
வாரியட்குச்சிகள்
தேடி முட்கூடு செய்யவும்
ஓயாது இரைந்து
ஒருவாய் உணவு கேட்கவும்
குப்பைகள் குதறி
மரித்த எலிகள் புசிக்கவும்
வீட்டருகே பறந்து
உன் வரவு கூறவும்..

Monday, August 27, 2007

மழை வெறித்த வானமாய்
என் மனம்
உன்னுடன் பேசிய மறுகணத்தில்
வானவில் வர்ணமாய்
உன் நினைவுகள் மட்டும்...
சிறு வயது முதலே
சிநேகிதம் கொண்டோம்
உனக்குள் ஒளிந்த
பாட்டியின் முகதேட்டல்
நிழலாய் தொடரும் இன்றும்...
உன் பிம்பம் தொடவே
நீர் இறைக்கிறேன் நித்தமும்
சலனமற்ற அதிர்வுகளில்
சந்தோஷம் கண்ட நினைவுகள்
நீங்குவதில்லை என்றுமே....

மனம் சோர்ந்த மாலைகளில்
ஒளி பாய்ச்சி என் உள்ளத்து
இருள் துடைத்து
மெளனியாய் கூறுகிறாய்
துணை நானென்று...

எனது சோகம், கண்ணீர்
சந்தோஷம் இப்படி
உணர்ந்த உணர்வுகளுக்கு
எல்லாம் என்றும்
நீ மட்டும் சாட்சியாய்...

மனம் கனத்த வேளையில்
கடந்து போன நியாபகங்களின்
மிச்சமாய் காணும் ஆவலில்
வெளிவந்தேன்
நீயற்ற வானம் வரவேற்றது...

மனம் மாறும் மனிதர்
நிறம் மாறும் பூக்கள்
நிஜம் தொலைக்கும் உறவுகள்
கண்டு நீயும் மறந்தாயோ
நம் நீண்ட கால நட்பினை?
நிலவே முகம் காட்டு...

Wednesday, June 20, 2007

உயரத்தில் பிறந்து
உற்சாகமாய் ஆடி
உயிருக்குள் புகுந்து
எச்சத்தின் மிச்சமாய்
மண்ணுள் புதைந்து
காலம் கனிய
கண்மூடி கனா கண்ட
ஒருநாளில்...
சிறுதுளியின் ஸ்பரிசம்
சிலிர்க்க வைத்தென்னை
உயிர்த்திருக்கிறேன் என்று
உணரவைத்தது...
உயிர் துடிக்க
உருப்பெறுகிறேன்
புதிதாய்
புதிய தாயாய்
அகன்று உயர்ந்த என்னை
அதிசயித்து பார்க்கிறேன்!
மலர்ந்து பூரணமடைந்த வேளையில்
கனி சுமந்து காத்திருக்கிறேன்
என் போல் ஒரு உயிர்
என்னில் இருந்து உருவாக...
விண்ணில் தேடுகிறேன்
இரைதேடும் பறவையை..

Tuesday, June 12, 2007

எட்டா தூரத்தில் நீ இருந்தாலும்
எட்டும் உன் குரலில் மகிழ்ந்து
என்னை மறக்கும் தருணத்தில்
ஒற்றையா இரட்டையா என்று
வினா தொடுத்து விதியின் பெயரில்
வெற்று சண்டை எய்கிறாய்..
என்னுள் நான் நொறுங்குவதை
உணராத காற்றாய்
கடந்து செல்கிறாய்..
என் முகத்தில் அறைந்த வண்ணம்...

Sunday, June 10, 2007

ஒவ்வொரு நாளும் முயல்கிறேன்
உனக்காக ஒரு கவிதையை..

உன் நினைவுகளில் விழும்
எனது நினைப்புகளின் தாக்கம்
உயிரில் சென்று உறையும்...

முடிந்து போன தருணங்களின்
முடிவற்ற மகிழ்ச்சியின் மிச்சம்
மூச்சோடு கலந்திருக்கும்..

யோசிப்பின் மீட்பு
எந்த நாளின் முடிவிலும்
கிடைப்பதில்லை...

ஒவ்வொரு நாளும் முயல்கிறேன்
உனக்காக ஒரு கவிதையை..

Saturday, June 2, 2007

நீரின்றி அமையாது உலகு
நீயின்றி அமையாது நட்பு..
நீயற்ற என் நாட்கள்
நிர்பந்தத்தோடு நகர்கின்றன...

காற்றாய் வந்தாய்
கனவாக உறைந்தாய்
காலம் கடந்திட்டாலும்
காயாது நட்பின் பசுமை...

வாழ்வின் நிதர்சனத்தில்
வழி மறந்த பறவையாய்
வலியோடு பறக்கிறோம்
வனாந்திரத்தில் தனித்திருக்கும்
நம் நட்பை காணாதது போல்...

Thursday, May 31, 2007

எத்தனை முயன்றாலும்
தவிர்க்க முடிவதில்லை
கப்பலிட்ட மழைநாளிலே
காலால் ஓடையில் துடுப்பிட்டு
மூழ்காத கப்பல் கண்டு
முழுக்க நனைந்த ஈரத்தினை...
கண்ணாடி வழியே
மழை ரசிக்கும்
மகனைப் பார்க்கையில்...

Thursday, May 24, 2007

யாரோ செய்கின்ற தப்பிற்கு
தண்டனைகள் மட்டும்
தவறாது எனக்கு...

நீ கண்ட காயங்களின்
வலிகளை என்னிடம்
வடுக்களாய் தேடுகிறாய்...

உனது அவமானங்கள்
எப்பொழுதுமே என் அழுகை
ருசிக்க தயங்குவதில்லை...

உனது ரணங்களை வேரறுக்க
என்னுள் விதைக்கிறாய்
அறுவடை ஆசையில்....

அத்தனையும் தூசியாய் தெரிகிறது
எப்பொழுதாவது நீ காட்டும்
அன்பின் முன்...

Monday, May 21, 2007

மனதிற்கு பசியெடுக்கிறது
எதை தின்றால் பசிதீரும்
என்று யோசித்து மடிகிறது மூளை...
சேர்த்து வைத்த உன் ஞாபகங்களை
சிறிது சிறிதாய் பிய்த்து
தின்ன ஆரம்பிக்கிறது மனசு..
எதுவுமற்ற வெறுமையில்
என்ன கிடைக்கும் என்று
தடுமாறும் மனதிற்கு
நீ அளித்த பிரிய உணவு ஏனோ
புசிக்கப் பிடிப்பதில்லை.....

Thursday, May 17, 2007

ஒரு நிமிடம் கூட பிரியாமல்
ஒன்றாகவே இருந்தோம்
அன்றில் பறவை
தோற்கும் வண்ணம்....

இன்றோ
ஒரு நிமிடம் என்னை நினைப்பாயா
என்ற வினா எழுப்பி
காத்து நிற்கிறேன்
வழி மாறிய செம்மறி ஆடாய்..

Monday, May 14, 2007

தேன்சிட்டு நீ என்று
புன்னகையோடு காத்திருந்தேன்
கடந்தையாய் கொட்டியென்
காதல் கொல்கிறாய்.....!!

Thursday, May 10, 2007

காத்திருந்த நாளெல்லாம்
காரணங்கள் அடுக்கினாய்
உனக்காக என்றறிந்தும்
உணராததது போல்
உயிர்வதை செய்தாய் !

காணாமல் போக துணிந்தபின்
காத்திருக்கிறேன் என்றுகூறி
கண்ணீரில் ஆழ்த்துகிறாய்
காயப்படுத்துவதன்றி வேரொன்றும்
அறியாயோ உயிரே!!

Wednesday, May 9, 2007

நீண்ட ஒரு இரவில்
நானும் என் தனிமையும்
தனித்து விடப்பட்டோம்
தன்னோடு இருந்த
தனிமை மறந்து,
உன்னோடு இருந்த
பொழுதுகளை அசை போட்டேன்
உன்னை போலவே
கோபித்துக் கொண்டோடியது
அலைபாயும் மனதை
துணையாய் விட்டு...

Monday, May 7, 2007

புல்லாங்குழலின் இசையாய்
புகுந்தாய் நரம்பினுள்
உறங்கிப் போன உணர்வுகள்
எழுப்பி தாளமிட வைத்தாய்..
கண்மூடி களித்திருக்கையில்
காணாமல் போனாய்..
இசை வந்த திசை அறியாமல்
விசையற்ற எந்திரமாய் நான்...

Sunday, May 6, 2007

நல்லதொரு நட்பென்று
நாளெல்லாம் மகிழ்ந்திருந்தேன்
புரிய வைக்க நீ கண்ட
சங்கடங்கள் சடுதியில் உணர்த்திற்று
புரிதல் இல்லா நட்பு நமதென்று
தளர்ந்து போகிறேன்....
தளைக்கும் முன் கருகும்
தளிர் ஞாபகத்தில்..

Saturday, May 5, 2007

மறந்தனையோ என்று மருகி
மனம் வாடும் நேரங்களில்
வலிந்த புன்னகை என்னுள்
வாசமற்ற மலர் போல...

கோபங்கள் இருக்குமோ என்று
குழம்பி தவித்து விடைக்காய்
எஞ்சி நிற்கும் அத்தனை
வேலைக்களுக்கு இடையிலும்...

எதிர்பாரா பொழுதினில் செவி
எட்டும் உன் குரலால்
நெகிழ்ந்து பொங்கும் உணர்வுகளை
ஒப்படைக்க வார்த்தைகள் தேடுகிறேன்...

Tuesday, May 1, 2007

புரிதல் இல்லா வாழ்வுதனில்
மெளனம் பழகுகிறோம்
நாட்களை கடத்தி விட..
நாளும் வளர்பிறையாயிற்று
நாம் கொண்ட மெளனம்....

தக்க தருணம் அமையுமென
காத்து நிற்கிறோம்
காதலை உள்ளடக்கி..
முட்டி மோதி உடைத்திட
வழி தேடி அலைந்திடும்...
தாங்க இயலா நொடியொன்றில்
உன் மெளனத்தால் கலையும்
என் மெளனம்
எதிர்பாரா சந்திப்புகள் ஏனோ
எதிர்கொள்ள முடிவதில்லை சுலபத்தில்
நீ தான் என்று அறிந்தாலும்
நான் தான் என்று அறியதரவில்லை.

சந்தர்ப்பங்களின் சதி என்று
சமரசம் செய்தாலும்
நட்பென்ற பெயரில்
நரம்பினில் புகுந்த வேதனை
உள் சென்று உயிர் வரை குத்தும்
உன்னோடு பேசும் பொழுதுகளில் எல்லாம்...

Tuesday, April 10, 2007

வழக்கமான இடத்தில் நான்
வசமிழந்து தான் போனேன்
கால் தொட்டு கை நீட்டியபோது
வாடிக்கையாய் போயிற்றென்றெண்ணியவாறே!

Saturday, April 7, 2007

ஆசைகள்.........
அனைவருக்கும் பொதுவானது
விருப்பங்களால் வேறுபடினும்
விளைவுகள் என்றுமே ஒன்றாகவே
வீண் ஆசை என்றறிந்தாலும்
விரும்பும் வினோத மனங்கள்....

அடங்காத ஆசையால்
அழிவில் பயணித்தாலும்
தீரா ஆசை ஏனோ
தீபந்தமாய் எரியும் உள்ளுக்குள்!

முடிகிறதோ இல்லையோ
முயன்று பார்க்க எத்தனிக்கும்
ஏமாற்றங்கள் எதிர்வருகையில்
ஏக்கங்களாய் தங்கிப்போகும்
எண்ணற்ற சில ஆசைகள்...

Friday, April 6, 2007

நினைவு நீர்நிலையில்
சிறு கல்லாய்
உன் ஞாபகங்கள்...

யோசனை எதுவும்
தோன்றாமல் அழைக்கிறேன்
உன்னை...

ஏதோ ஒன்றை
கூறுவதாய் நீயும்,
கேட்பதாய் நானும்....

விளையாட்டாய் சொல்கிறாய்
அறிந்தாலும், நீயாகிவிட்டதால்
துடித்துதான் போகிறேன்..
வார்த்தை நெருப்புகள் பாய்ச்சி
குளிப்பாட்டுகிறாய் என்னை - நீ
குளிர்காய்வதற்காய்...!

சுழன்று எரியும் ஜுவாலையின்
முடிவில் கணன்று பரவும்
என் விருப்பங்களும்...

மழை விரும்பும் மண்ணாய்
மனம் விரும்புகிறது உன்னை
கண்ணீரில் கரையும் உன் உருவம்..

அனைத்தும் பொசுங்கிய
அனாதரவான வேளையில்
அடங்காது சுழலும் ஆசைகள் மட்டுமே ....
இன்று, நாளை என்று
ஒவ்வொருமுறையும்
முற்றுப்புள்ளி வைப்போம்...!
விடைபெறும் நொடிகளில்
தொண்டைக்குள் சிக்கும்,
வேதனை உணர்தலில்
தவிர்க்கப்படும் சில வார்த்தைகள்....

என்னை மீறி நான் சிந்தும்
கண்ணீர் அறிவாய்
உன் விழிநீர் துடைத்திடும் பொழுதினில்!
பிரிவு உணர்த்தப் போகும்
வலி எண்ணி வலுவிலக்கும் உள்ளம்..
ஏனோ நம் பிரிதல் நீண்டுக்கொண்டே..
இன்று, நாளை என்று
ஒவ்வொருமுறையும் !..

Sunday, March 25, 2007

புரியாத நட்பொன்று
புதிராக நிற்கும்...
பல நாட்களாய்
பழகியவிடத்தும்..!

காரணமற்ற கதைக்கு
பொருப்பற்ற கோபங்கள்
சீண்டிப் பார்க்கும்
நம் நட்பை..

அவசரத்தில் வீசும்
அனாவசிய வார்த்தைகள்
கிழிக்கும் இதயத்தை
இரக்கமற்றதாய்..

அறிந்த போதும்
அழகான கேள்விகள்
விடை இல்லாது
விசும்பும் மனம்...

போ என்று கூறி
போகாமல் காத்திருக்கும்
உன் மேல் படர்ந்த
உனக்கான என் நட்பு...

Thursday, March 22, 2007

காத்திருப்புகள்
கணிசமாய்உயர்ந்து கொண்டே...
எனக்காய் நீயும்
உனக்காய் நானும்
காத்திருப்பது
அறிவோம் நீயும், நானும்
ஏனோ போலியாய்
இருவருமே...

Saturday, March 17, 2007

அவசர உலகில்
அனாவசியமாய் நேரம் இழந்து
சண்டைகளுக்கான காரணங்களை
சடுதியில் தேடி களிப்புறுகிறாய்...!

வாய்புக்காய் தவம்புரிந்து
வாழ்க்கை தொலைக்கிறாய்..
வரைமுறைகள் காட்டி
முயலுக்கு கால் மூன்றென்கிறாய்

எத்தனையோ முறைகள்
முயன்றும் முடியாமல் விழிக்கிறேன்...
தூங்குவதாய் பாவனையில் இருக்கும்
உன்னை எழுப்ப இயலாமல்!

Tuesday, March 13, 2007

அடிக்கடி நான் அழைத்தபோதும்
என்றுமே நீ இருப்பதில்லை
என்னவென்று கேட்பதற்கு..

இன்றும் அப்படித்தான்
என்று அறிந்தபோதும்
அழைக்கத் துடிக்கும் மனம்..

என்னவாகிறேன் நான் என்று
விதிர்த்துப் போகிறேன்
விடைதருவாயோ என் விலாசமே?

Thursday, March 8, 2007

துன்பங்கள் கண்டாலும்
துவளாது மீண்டு,
போலியாய் வரும்
புகழ்ச்சிக்கு மயங்காது,
கனவுகள் கண்டு
விருப்பங்கள் நிறைவேற்றி
மதிப்போரை போற்றி
மிதிப்போரை தூற்றி
நம்பிக்கை கொண்டு
நாளும் வீறுபெற்று
மண்ணோர் போற்ற
விண்ணோர் வாழ்த்த...
வசப்படும் வானம் கூட
உன் தெளிந்த புன்னகையில்...!.
எத்தனை எத்தனை உறவுகள்
இருந்தபோதிலும் பெண்ணே
நீ தந்த உறவு
நீங்காது நெஞ்சை விட்டு.....
பெண்ணே நீ வாழி- பசும்
பொன்னே நீ வாழி!

Saturday, February 24, 2007

காத்திருப்பு சுகம் என்று
கருத்தில் பதித்தேன்
ஆரம்ப நாட்களில்....

இன்று, நாளை
என்று இழுத்தடிக்கிறாய்
நமது சந்திப்பை..

புன்சிரிப்போடு உனது
காரணங்களை ஆராயாமல்
கடக்கிறேன்..

வருடங்கள் ஓடிய
பின்னும் ஏனோ
வர யோசிக்கிறாய்..

நேசிக்கிறாய் என்பதால்
நானும் வருத்தம்
தவிர்க்கிறேன்..

காத்திருப்பு கொடுமை என்று
கருத்தில் கொண்டு
இன்றும் கூட காத்திருக்கிறேன்..

வழக்கம் போல் நீ வராது
கேட்கப் போகும்
மன்னிப்பிற்காய்...

Friday, February 23, 2007

உற்சாகமாய் உணர்ந்தேன்
உன் அன்பை காண்கையில்
ஒவ்வொரு அசைவிலும்
புரிய வைக்கிறாய்...
எத்தனை முக்கியத்துவம்
எனக்களிக்கிறாயென..!
எளிதில் விலக்கமுடியாத
வண்ணம் வசப்படுத்தினாய்
எல்லாமே நீதானென்று
இறுமாந்திருக்கையில்..
சட்டென இடரப்பட்டேன்
நிஜமென கொண்டாடிய
நினைவுகள் கலைய
முகம் மறைத்து
முகமூடியோடு வலம் வந்தாய்
என அறிந்த போது,
கவரப்பட்டது என் கனவுகளும்
தான் என்று கலவரப்பட்டேன்...
நானும் தேடுகிறேன்
எனக்கொரு முகமூடி
உன்னோடு வாழ....

Wednesday, February 21, 2007

நினைவுகளில் கலந்து
நீங்காது நின்றாய்
நெஞ்சில்...

அவசர சாரலாய்
சட்டென வந்து
பட்டென்று ஒட்டிக்கொண்டாய்

எத்தனை முறை
துவட்டிய போதும்
துளியின் மிச்சமாய்
என்னுள் ஒரு ஈரம்...
விடை கேட்டு விரட்டிக்கொண்டே...

Friday, February 16, 2007

வேஷமென்று என்னை இகழ்ந்திட்டாய்..
வேல்கொண்டு நெஞ்சினில் பாய்த்திட்டாய்..
வேதனை மிக செய்திட்டாய்..
வெஞ்சினம் கொண்டு பழித்திட்டாய்..
வேண்டாம் என்று விலக்கிட்டாய்..
வேள்வியில் இட்டு பொசுக்கிட்டாய்..
வேகும் மனமென்று அறியாயோ?

Thursday, February 15, 2007

அழைத்தாயா என்று கேட்டாய்
ஆமென்று சொன்னால் தான்
அறியாவாயோ விளிக்கும் மனது!
உனக்காக பதிலிருத்தேன் "தினமும்"!
உண்மையில் ஒவ்வொரு நொடியும்
உன்னை அழைக்கிறேன் உணர்வாயா?
என்றாவது என்னவென்று கேட்க
என்னருகே வருவாய் என
எண்ணியாவாறு காத்திருக்கிறேன்..

Sunday, February 11, 2007

புரிந்த போதும்
புதிராய் சில கேள்விகள்
உன்னிடம் இருந்து...
துவண்டு போவேன்
என்று அறிந்தும் கேட்கிறாய்..
கேட்காதிருப்பது நலம் என்று
அறிய மறந்தாயா? அன்றி
அழுகை ரசித்தாயா?
சங்கடங்கள் இருப்பினும்
சந்திக்க வந்தேன்.
என் பார்வை புரியாது
ஏதோ கூறினாய்..
விடைபெறும் போதும்
எதிர்பார்த்தேன் கேட்பாயென..
இறுதி வரை கேட்கவில்லை
"எப்படி இருக்கிறாயென..."

Saturday, February 10, 2007

கண்ணீர் காண
காலம் தாழ்த்துகிறாய் என்றால்
உரைத்திடு ஓர் வார்த்தை.
உனை பிரிந்த நாட்கள்
உயிர் வலி தந்திட
விழி நீர் கண்டுவிடும்.
வாராமல் வதைக்காதே அன்பே!

Thursday, February 8, 2007

எனக்கு தெரியும்
எப்பொழுதோ நீ
என்னை கடந்து விட்டாய்
என்று...
எனினும் அன்பே..
ஏற்றுக் கொள்ள மறுக்கிறது
என் மனம்
ஏனென்று புரியாது நான்!
எப்பொழுதும் புதிராய் நீ!!
ஞாபகங்கள் சிறகடிக்கும் போதும்..
குளிர் தென்றல் தழுவிடும் போதும்..
இரவில் வானம் பார்க்கும் போதும்..
கடற்கரையில் கால் நனைக்கும் போதும்..
பறவைகள் கூட்டம் கடந்திடும் போதும் ..
பேருந்தில் பிராயணிக்கும் போதும்..
நிலவோடு உரையாடும் போதும்..
தென்னங்கீற்றோடு கவிபாடும் போதும்..
மழைத்துளி இரசித்திடும் போதும்..
நினைவுகளின் தூசி துடைத்திடும் போதும்..
மனம் நிர்மூலமாய் தவித்திடும் போதும்..
கண்கள் கலங்கி நிற்கும் போதும்...
ஏதேதோ எண்ணங்களை விதைக்கும் மனமே..!!
இனிமையான பொழுதுகள் யாவும்
உன் அருகாமையை உணரச் செய்கின்றது..
என் இனிமையான உறவே !

Sunday, February 4, 2007

பல நட்புகளை காணும் பொழுது
தவிர்க்க முடியாது தோன்றுகிறது
உன் முகம் என் மனதினுள்..

தபால் என்ற குரல் கேட்டால்
உன் கடிதமாய் இராதா என்ற
ஆதங்கம் உள்ளுக்குள்…

வழியில் காணும் கோவில்
எல்லாம் கவனமாய் பிரார்த்திக்கிறேன்
உனக்காகவே நெஞ்சுக்குள்…

பயணிக்கும் போதும், தனிமையிலும்
உன்னுடன் மட்டுமே பேசுகிறேன்
மானசீகமாக…

நிமிடத்தில்! நீ ஒரு முறையேனும்
நினைப்பாயா என்னை, என்ற
கேள்வி எனக்குள் !

இருப்பினும்…இமை முடி எடுத்து
ஊதுகிறேன் ஒரு முறையேனும்
உனைசந்திக்க வேண்டும் என்ற
வேண்டுகோளோடு…